List Price
$10.00

காலச்சுவடு இதழ் 305 (2025 மே) தலித் மக்களை வழிபாட்டுக்கு அனுமதிக்க வேண்டுமென்ற உயர் நீதிமன்றத் தீர்ப்பை முன்வைத்து, சாதிக் கட்டுப்பாட்டில் இயங்கும் தமிழகக் கோயில்களின் தற்போதைய நிலைமையை தலையங்கம் அலசுகிறது. கோயிலைப் பொதுவான தளமாக மாற்றுவதற்கான அவசியத்தைக் கூறுகிறது. அண்மையில் காலமான ஸ்பானிய எழுத்தாளர் மரியோ வர்கஸ் யோசாவின் படைப்புலகம் குறித்த சுருக்கமான சித்திரத்தை என்னெஸ் தருகிறார். யோசாவின் கதையொன்றைத் தமிழில் ஜி.ஏ. கௌதம் மொழிபெயர்த்திருக்கிறார். நவீன் ராஜன் எழுதியுள்ள ‘நீளும் தூரத்தில் நீல வெளிச்சங்கள்’ கட்டுரை, தலித்துகளையும் அவர்தம் வாழ்வியலையும் மெய்யான வெளிப்பாட்டுடன் பேசும் திரைப்பட இயக்குநர்களையும் அவர்களது படைப்புகளையும் பற்றி விரிவாகப் பேசுகிறது. தமிழ்த் திரையுலகில் தலித் சினிமா ஏற்படுத்திய மாற்றங்களை விவரிக்கிறது. செங்கொடி இயக்கத்தின் திசைவழி: இந்தியக் கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் 24ஆவது அகில இந்திய மாநாடு குறித்த தன்னுடைய எண்ணங்களையும் கருத்துகளையும் ச.தமிழ்ச் செல்வன் பதிவுசெய்கிறார். பெருமாள்முருகன் படைப்புகளின் பயணம் : மார்ச் மாதம் லண்டன் டிரினிட்டி மையத்தில் நடந்த பெருமாள்முருகன் எழுத்துகள் தொடர்பான கருத்தரங்கில் கண்ணன் ஆற்றிய உரையின் கட்டுரை வடிவம். தனக்கும் பெருமாள்முருகனுக்குமான நட்பு, அவருடைய படைப்புகளை வெளிநாடுகளில் சந்தைப்படுத்தும் முயற்சி ஆகியவற்றை விவரிக்கிறார். 88 வயதாகும் இந்தி எழுத்தாளர் விநோத் குமார் சுக்ல குறித்தும் அவருடைய படைப்புலகம் குறித்தும் எம். கோபாலகிருஷ்ணன் எழுதிய கட்டுரையும் சுக்லவின் கவிதைகளும் இடம்பெற்றுள்ளன. சச்சிதானந்தன் சுகிர்தராஜாவின் கட்டுரை சாரா வின்-வில்லியம்ஸ் எழுதிய கேர்லஸ் பீப்பிள் : ஸ்டோரி ஆஃப் வேர் ஐ யூஸ்ட் டூ வொர்க் நூலினைக் குறித்து விரிவாக ஆராய்வதோடு இந்த நூலில் இடம் பெறும் மார்க் சக்கர்பர்க் குறித்தும் பல கருத்துகளை எழுதியுள்ளார். தமிழறிஞர் மு. அருணாசலம் குறித்த விரிவான பார்வையை ஜெ. சுடர்விழி முன்வைக்கிறார். மதிப்புரைகள் : மக்களின் மேதை எம். பி. சீனிவாசன் - தியடோர் பாஸ்கரன், நீல பத்மநாபன் கவிதைகள் - களந்தை பீர்முகம்மது, பாலேந்திராவின் அரங்கக் கட்டுரைகள் - வெளி ரங்கராஜன். சிறுகதை : சல்மா, நுண்கதைகள்: சுஜித் லெனின் கவிதைள் : விநோத் குமார் சுக்ல ( இந்தியிலிருந்து தமிழில்: எம். கோபாலகிருஷ்ணன்) அஞ்சலி: கணநாத் ஒபயசேகர (சேரன்), முத்து காமிக்ஸ் சௌந்திரபாண்டியன் (எஸ். ராமகிருஷ்ணன்) எதிர்வினை : இரும்பின் தொன்மை குறித்து பி.ஏ. கிருஷ்ணன் எழுதிய கட்டுரைக்கு லி. சிவக்குமாரின் எதிர்வினை.